Tuesday, June 28, 2005

பயணம் (நோக்கு சிறுசஞ்சிகையில் வெளிவந்தது)

காலையில் இரண்டு ரொட்டிகளைத் தின்ன கெலி இருந்தும், ஒன்றைச் சாப்பிட்டு வேலைக்குப் புறப்பட்டேன்.

என்னைப் பொறுத்தவரை வேலைக்குப் போகும் படலம் என்பது பரீட்சைக்குப் படிக்கும் போது ஏற்படும் உணர்வு புரிந்தும், புரியாததும் இருக்கும். போகாது நிற்கலாம் என்ற யோசனை எட்டிப்பார்க்கும். சீ... இதென்ன கோழைத்தனம் என உட்குரல் கேட்கும். இறுதியில் நடப்பது நடக்கட்டும் ~நீ உன் கடமையைச் செய்| என்பதன் உள்ளார்ந்த பொருளுணர்ந்த மோன நிலையில் கிளம்புவேன்.

முன்னறை வாசலில் இருந்து கேட்வரை சைக்கிளை உருட்டி வருவதற்கு 80 அல்லது 84 அடிகள் எடுத்து வைக்க வேண்டும். அப்படியே சைக்கிளின் முன் ரோதையை கேட்டில் முட்டவைத்து அதன் கொழுக்கியை ~ணங்| கென்று எடுத்து சைக்கிளை இடமாய் தினுசாக வளைத்து கேட்டின் இரும்புக் கேடர்களில் கால்கள் கிழிபடாது வெளியே வந்தால் சுறாவிடம் இருந்து தப்பித்த சுகானுபங்கிட்டும.;

பின்னர் பின் ரோதையை கணக்கெடுத்தவாறு கேட்டில் முட்டியும், முட்டாததுமான துறவு நிலையில் சைக்கிளை நிற்பாட்டி கொக்கியை மாட்டுவேன் - ~ணங்| என்று வேறோர் சுருதியில் ஒலிக்கும்.

செம்மண் வீதி.

சைக்கிளின் இருக்கையை ப்ஊ..... ப்ஊ...... என்றெல்லாம் ஊத உகந்த இடம். அப்பா தன் முகத்தில் அன்றாட அலுவல்கள் முடிந்ததும் ~சேவிங் செட்டை| ஊதுவதும் இப்படித்தான்;. அதில் கொர்...சர்... என்ற வேற்றொலிகளும் கலந்திருக்கும். என்னதில் கலப்பிருக்காது. சுத்த பஞ்சமத்தில் வரும் ப்ஊ..... ப்ஊ..... ப்ஊ.....

சின்னப் புதுக்குளத்து செம்மண் வீதி ரொம்பச் செழிப்பானது. வேம்பு, தேக்கு, மா மரங்களால் அடர்ந்தது. வவுனியா எங்கும் வெயில் உக்கிர தாண்டவமாடினாலும் சின்னப் புதுக்குளத்தில் அது இவ் அடர் மரங்களோடு சிரித்துக் கைகோர்த்துப்போம். மந்தைகள் தாம் இடும் பசளைகளை இங்குதான் இடுவோம் என்று சங்கல்பம் செய்ததோ என்னவோ இன்னோரன்ன வகை சாணி, புழுக்கைள் இறைந்து கிடக்கும்.

தெருவை ஒரு தரம் அளவெடுத்தவாறு சைக்கிளை இடதுபுறம் சாய்த்து வலது பெடலை தட்டி மேலே சுழற்றிக் கொண்டு வந்து விட்டு, இடக்காலை நெட்ட மரம் போல் உறுதியாய் வைத்துக் கொள்வேன். ஏலவே மேற் கொண்டு வரப்பட்ட பெடலை, வலக்காலால் இலேசாக அழுத்தியபடி, நெட்ட மரக்காலை மெது, மெதுவாய் காற்றில் உயர்த்தி இடது பெடலில் வைத்தவாறு லாவேகமாய் இருக்கையில் அமர்ந்து பெடல்களை மாறி மாறிச் சுழற்றுவேன். மோனம் கலைந்திருக்கும்.

சைக்கிளும் எனக்கேற்றபடி குதிரையாய்ச் சிறகெடுக்கும். சாணிகளுக்கிடையே லாவேகமான சுழிப்புகள், சுற்றிவளைப்புகள், வெட்டுகள் அனைத்தும் நடக்கும். எதுவும் இயலாத பட்சத்தில், குவியல்கள் மேலேயே குதிரைப் படையெடுப்புகள் நிகழும். ஒவ்வொரு குவியலின் மீதான படையெடுப்பும் அதைக் கடந்தபின் ஓயும். உடனே ஜான்சி ராணியாய் கழுத்தைத் திருப்பி என் படையெடுப்பின் தீரச்சுவடுகள் சாணக் குவியலின் நடுவே டயர் அடையாளங்களாய்த் தென்படுகின்றனவா என்பதைப் பார்த்து கணச் சிமிட்டலில் முன் திரும்புவேன். அடுத்தது படையெடுப்பா, சுற்றி வளைப்பா என்று முடிவு செய்ய ஒரு கணம் மிச்சமிருக்கும்.

செம்மண் வீதியால் வலப்பக்கம் திரும்பி வருகிற தார் ரோட்டை, ஒரே தாவலில் கடந்து பெரிய கல் ரோட்டுக்குள் நுழைவேன். முழுவதும் நொறுங்காத கருங்கற்களால் ஆன பாதை இது. இதற்குள் நுழைந்து வெளியேறும் என் வாகனத்துக்கு ~டொக் டொக்| குதிரை அனுபவம் மறுத்தாலும் கிட்டும். பெரிய கல் வீதியைத் தாண்டுகையில் பொருட்கள், பொத்தான்கள், உதிரிப்பாகங்கள் இருக்கின்றனவா என்ற தேடல்களும், அடையாளப்படுத்தல்களும் தினப்படி நிகழ்வு.

அதைக் கடந்து இடப்புறம் திரும்ப, வருவது ஹொரவப்பொத்தானை ரோட்டு. வீதியின் பெயர் வாயில் கெழுத்தி முள்ளு மாதிரிச் சிக்கும். மற்றப்படி நேர்வழி. பள்ளங்கள் சாதாரணம். சிலவற்றை அவசரத்துக்கு பங்கர்களாகவும் பாவிக்கலாம்.

இந்த ஹொரவப்பொத்தானை ரோட்டில் அதிக கவச வாகனங்கள் எதிரே ஊர்ந்து வரும். அப்பிடியான சோம்பேறிகளை எனக்கும் என் நேசப்படை சைக்கிளுக்கும் பிடிப்பதில்லை.

ஆவேசக் கோபத்தில் ~டிரிங் டிரிங்டிரிங்| என்று உரத்துச் சுட்டபடி போவோம். எம் சக்கரங்கள் உருளும். அருகே யோசப் காம்பில் இருந்து ஷெல் வேட்டை நாய்கள், முல்லைக்கு ஓடுவதையும் அவற்றை ஹெலிகள் விட்டுத் துரத்துவதையும் கண்காணித்தபடி எம் சக்கரங்கள் உருண்டோடும். ரோஜர் மூரைப் பார்த்ததிலிருந்து அசையும் ஹெலியை ஒற்றைக் கையால் எட்டிப் பிடித்து ஏற எனக்கும் ஆசைதான். என்றாலும் எனது சைக்கிளின் நேசத்தை இழக்கத் துணியாது ஆசையை அடக்கிக் கொள்வேன். அதன் விளைவு வீதியில் எதிராளிகள் இல்லாவிட்டாலும் மேலும் மூன்று தடவைகள் ~டிரிங் டிரிங்டிரிங்| என்று கண்ணை மூடிக்கொண்டு சுட்டுத்தள்ள வேண்டியிருக்கும்.

இவ்வாறு எங்கள் கூட்டுப் படை முன்னேறிச் செல்லுகையில் இடப்பக்கமாக உள்ள மன்னார் வீதி கண்ணில் நேராய் விரியும். இம் மூன்றாங் கட்டப் போர் முனையில் திட்டமி;ட்டபடி வேகங் குறைத்து நிதானமாய், மழைகாலத்துப் படையணியின் சாணக்கியத்தோடு நாங்கள் நகருவோம்.

இன்றும் பல சீவன்கள் வேலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன. பாதைகள் குறுக்கும் நெடுக்குமாய், வளைந்தும் நேராயும் சந்து பொந்துகளோடு கிடக்கின்றன. ஒவ்வொருவரும் தனக்கிசைந்ததோர் வாகனத்தில் பயணிக்கின்றனர். சிலர் நடையில்.

என்றாலும் எங்கள் முகங்களின் மேல் வாயுக்கவசங்கள் துருத்திக் கொண்டிருக்கின்றன. சோறு இருந்தென்ன? சுதந்திரக் காற்றில்லையே. அதுதான் இந்த முகமூடிக் கோலம.;

என்றாயினும் குறுக்கும் நெடுக்குமாய்க்; கிடக்கும் இந்த ஒற்றையடிப் பாதைப் புதிரை, விடுவிக்க எம் ஒருவருக்காவது முடியாமற்; போய் விடுமா என்ன?

அப்போது தென்றலாய்க் கீற்றுக்களிடையே தவழ்ந்து, சிலுசிலுத்து, சிற்றாலிகள் ஒவ்வொன்றாய்ச் சேகரித்து உள்வாங்கி சுழன்றெழுந்து ~ஹோ| எனும் இரைச்சலாய், பேரிரைச்சலாய் ஆரோகணித்து உச்சஸ்தாயில் தணிந்து குளிர்ந்து எமக்குக் கிட்டும் சுத்தக்காற்று.

சுத்தக்காற்று........! பரிசுத்தக்காற்று......! சுதந்திரக்காற்று மோத முகமூடிகள், வாயுக்கவசங்கள் அனைத்தும் அறுந்து வீழும் அக்கணமே.

தேடல்களும் அடையாளப் படுத்தல்களும் அப்போது ஸ்தம்பிதமாகும்.

அன்று வேலையிலிருந்து எனக்கும் ஓய்வு கிடைக்கும்.
என் சைக்கிளும் ஓரிடத்தில் தரித்திருக்கும்.

1996

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

11 Comments:

At 7:24 AM, June 26, 2005, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாங்க ஆழியாள்.

இப்போதாவது ஒரு வலைப்பதிவு தொடங்கினீர்களே!

சந்தோஷமாக இருக்கிறது.

-மதி

 
At 4:13 PM, June 27, 2005, Blogger aazhiyaal said...

மதி, நன்றி. தொடங்கி என்னத்த கிழிக்கப்போறேன்னு எனக்கும் தெரியல்லை. உங்க எல்லார் கூடவும் பேசலாம் என்றுதான். (இங்க தனிய ஒத்தக் குரங்காட்டம் உக்காந்துட்டு இருக்கிறேன்.)

எல்லாம் ஒரு கும்பல் குணந்தான்.

 
At 4:56 AM, June 28, 2005, Blogger -/பெயரிலி. said...

ஆழியாள், வருக.


/இங்க தனிய ஒத்தக் குரங்காட்டம் உக்காந்துட்டு இருக்கிறேன்/
குரங்குக்குணமே கும்பற்குணந்தானே! சாட்டோட சாட்டாய் மதி, என்னைப்போல ஆக்களையும் குரங்கெண்டு சொல்லிப்போட்டியள். ;-)
பி.கு.: மதியின்ரை கதையை நம்பாதீங்கோ; இப்ப சந்தோஷமெண்டுவா; பிறகு சதாதோஷம்மெண்டுவா. கவனம்

 
At 4:03 PM, June 28, 2005, Blogger aazhiyaal said...

நேற்று, Men in Black கோலத்தில வந்தால் போல நீர் குரங்கில்லாமல் போயிருவீரோ (பக்கத்தில் நின்றது யார் செர்ரீ தானே.) நாங்க எல்லாரும் modern குரங்குகள் என்று ஒரு திருப்திக்கு வைத்துக் கொள்வோம்.

மதியைப் பற்றி முன்னமே அறிந்திருந்தேன். இப்ப பெயரிலியும் சொன்னதை வைத்து ஆளை மட்டுக்கட்டிவிட்டேன் :-)

 
At 4:27 AM, July 08, 2005, Blogger Thangamani said...

வாங்க ஆழியாள். கும்பலில் ஐக்கியமாகுங்கள்!

 
At 10:18 AM, July 08, 2005, Blogger -/பெயரிலி. said...

/கும்பலில் ஐக்கியமாகுங்கள்!/
கோவிந்தா! கோவிந்தா!!
;-)

 
At 7:33 AM, July 21, 2005, Blogger சினேகிதி said...

\\அடுத்தது படையெடுப்பா, சுற்றி வளைப்பா என்று முடிவு செய்ய ஒரு கணம் மிச்சமிருக்கும்.\\ :)

 
At 11:40 AM, August 22, 2005, Blogger SnackDragon said...

//(பக்கத்தில் நின்றது யார் செர்ரீ தானே.) //
ஓ அது யாரு செர்ரி? :-)
வாங்க வாங்க.. உங்களை பத்தி நிறைய கேள்விப்பட்டுருக்கேன்.

 
At 8:40 AM, January 31, 2010, Anonymous Anonymous said...

நன்றாகவே உள்ளது. www.maatrupirathi.tk

 
At 3:18 AM, January 04, 2011, Anonymous tamil web library said...

nice blog

visit my blog

tamil web library

 
At 9:31 PM, June 10, 2011, Blogger குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம்
செய்திருக்கேன். நேரம் கிடைக்கும்
போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_11.html

 

Post a Comment

<< Home