மன்னம்பேரிகள்
காலப் பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்தி சந்தைகளில்
பிரயாணங்கள்; பலவற்றில் கண்டிருக்கிறேன்.
நாய் கரடி ஓநாய்
கழுகு பூனை எருதாய்ப்
பல வடிவங்கள் அதற்குண்டு.
தந்திக் கம்பத் தருகே
கால் தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம் மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்.
அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.
அழகி மன்னம்பேரிக்கும்;
அவள் கோணேஸ்வரிக்கும்;
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.
அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் - நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையை புரிந்து கொண்டேன்.
அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்.
10.07.1997
மன்னம்பேரி(22) 1971 ஜே.வி.பி கிளர்ச்சியில் பங்கு கொண்டவள். பெண்கள் அணிக்கு தலைமை தாங்கியவள். 1971 ஏப்பிரல் 16இல் மன்னம்பேரி படையினரால் கைது செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.
கோணேஸ்வரி(33) அம்பாறை சென்றல் கேம்ப் 1ம் கொலனியைச் சேர்ந்தவள். 1997 மே 17 இரவு இவரது வீட்டுக்குச் சென்ற படையினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியபின் அவளின் யோனியில் கிரனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்துச் சென்றனர்.
1 Comments:
ஆழியாள்.. இந்தக் கவிதையை 'பறத்தல் அதன் சுதந்திரம்' கவிதைத் தொகுப்பில் படித்திருக்கிறேன்.அந்த ஆழியாள் நீங்கள் தான் என்றறிகையில் எதிர்பாராமல் வெகு நெருக்கத்தில் உங்களை சந்திந்த சந்தோஷமுண்டாகிறது.
Post a Comment
<< Home