Monday, June 20, 2005

தொடர்பாடல்

மனக்கண்ணாடிகள் மர்மமானவை.
பிறப்பெடுத்த மனிதர் எத்தனையோ
அத்தனையுண்டு அவற்றின் விதங்கள்.

இடதை வலதாயும்
வலதை இடதாயும் புறம் மாற்றி
எட்டத்தை கிட்டவாக்கி
கிட்டியதை
எட்டித்தள்ளி வைக்கும் மனக்கண்ணாடிகள்
மர்மமானவை.
குவிவாடி, குழிவாடி, ரசவாடியாய்
பச்சோந்தித் தோற்றங்கள் பலகாட்டி
பிறன்கண் பீழை உருப்பெருக்கி - அவை
தம் இருப்பை மறந்துவிடும்.
சிதறுவில்லைக் கண்ணாடிகளோ
முடுக்குகளில் இடுங்கிச் சரிந்து
வேற்று நிறங்களாய் வித்தைகள் காட்டும்.


ஆடிகளின் அசைவுக்கேற்ப
ஓளிதெறித்துக்
குவியும் கணத்தில்……
வெளிப்படும் வார்த்தைகளும், வரிகளும்
உருக்களில் பெருத்தும் சிறுத்தும்
கருமாறிக் கிடக்கும்.
உள்ளங்கையில் குழையல் சோறாய்
வெறும் பொய்யும் மெய்யும்
திரண்டு நிற்கும்.

மனக்கண்ணாடிகள் மர்மமானவை.
பாவனையில் உள்ள
நம் மொழிகளோ மாயையானவை.

04.06.1998.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

At 3:00 PM, April 14, 2008, Blogger Indran said...

அன்பான ஆழியாள்,
இதுவரையும் வெளிவந்த கவிதைகள் அனைத்தையும் நீங்கள் வலைப்பதிவில் இடவிலை என நினைக்கிறேன். அல்லது வேறு வலைப்பதிவை வைத்திருக்கிறீர்களா?
தற்போது வாசிப்பதற்கு நேரத்தைக் கண்டு பிடிக்க முடிவதால் தேடத்தொடங்கியிருக்கிறேன்.
சரிநிகரில் எழுதிய காலத்தில் உங்கள் சில கவிதைகளை வாசித்திருந்தேன்.
இதனை வாசிக்கக்கிடைத்தால் அறியத்தாருங்கள்
நன்றி
தேவஅபிரா.
thevaabira@versatel.nl

 

Post a Comment

<< Home